தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள்: அரசு அறிவிப்பு

 

தீபாவளி நேரத்தில் ஊர்களுக்குச் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
தீபாவளித் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு ஏதுவாக, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இம்மாதம் 9-ஆம் தேதி 768 பேருந்துகளும்,
10-ஆம் தேதி 633 பேருந்துகளும், 11-ஆம் தேதி 543 பேருந்துகளும், 12-ஆம் தேதி 884 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போல், சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 9-ஆம் தேதி 925 பேருந்துகளும், 10-ஆம் தேதி 940 பேருந்துகளும், 11-ஆம் தேதி 977 பேருந்துகளும், 12-ஆம் தேதி 1189 பேருந்துகளும், ஆக மொத்தம் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 6,859 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அவ்வாறே, தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.
சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதள பயணச் சீட்டு முன்பதிவு முறையில், (Online Ticket Reservation System) www.tnstc.in மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே போல், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இம்மாதம் 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சென்னையின் இதர பகுதிகளில் இருந்து தியாகராயநகர் பகுதிக்கும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கும் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண். 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ. செந்தில்பாலாஜி வெளியிட்ட அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

www.tnstc.in

No comments:

Post a Comment